" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், உங்கள் போதனைகளை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை… என்னை மொத்தமாக திருப்பி போடுவது போல உணர்கிறேன்..! பயம் வருகிறது…. ஓடவும் முடியவில்லை.., விடவும் முடியவில்லை.., என்னை கை தூக்கி, வெளியே கொண்டு வருவீர்களா?

September 23, 2023 | 97 views

ஜியெம்:

தனித்த அடையாளமாக ஒப்புக் கொண்ட உன் சுய அறிவு தன்னை அறிய வாய்ப்பில்லை!

தனித்த அடையாளம் வழியாக எனது போதனைகளை ஒப்புக் கொள்ள இயலாது.

எனது போதனைகள் அனைத்தும் உன் சுய அறிவிற்கே (Consciousness)!

சுய அறிவு தற்போது வசதியாக அடையாளங்களை நிஜம் என ஒப்புக் கொள்வதால்…. தற்போது காணும் கனவை…
நிஜம் என ஒப்புக் கொள்கிறது…. தன்னை அறியாமலேயே!

கே: என்னை மொத்தமாக திருப்பி போடுவது போல உணர்கிறேன்!

நிச்சயமாக!

ஏனெனில், உன் சுய அறிவு எல்லை அற்றது!

வடிவங்கள் அதில் நிகழ்கிறது…

வடிவங்கள் அதில் மறைகிறது.

சுய அறிவு வடிவத்திற்கு அப்பால்….

ஆயினும், தன் எல்லை அற்ற ஆற்றலை அறியாமல் தன்னை ஒரு சிறு வடிவமாக ஒப்புக் கொள்கிறது.

வடிவமாக ஒப்புக் கொள்வதால்…. தான் பிறந்ததாகவும், தனக்கு இறப்பு உண்டு என்றும் ஒப்புக் கொள்கிறது….

எல்லை அற்ற ஒன்று எவ்வாறு ஒரு எல்லைக்குள் தன்னை குறுக்கி கொள்ள இயலும்?

எனவே, சுய அறிவு, வடிவ அடையாளம் வழியே தடுமாறுகிறது… தன் முழுமையை அறிந்த குருவை காணும் வரை…. காணும் அனைத்தும் நிஜமாகவே ஏற்று கொள்ளப்படுகிறது…

முழுமையை அறிந்த குரு… தனது போதனைகளால்,

” ‘நீ சுய அறிவு தற்போது!’ இந்த சுய அறிவே அனைத்தையும் படைத்து , அவற்றின் வழியே இயங்குகிறது!

இங்கு, பர வெளியில் காணும் அனைத்தும்….கனவே ! நிஜம் அல்ல! நீ பார்க்கும் நித்தியம்!

பார்க்கும் உனக்கு பிறப்பில்லை! பிறவா உனக்கு இறப்பு ஏது?

இங்கு நீ காணும் அனைத்தும் கனவே! நிஜம் அல்ல! 

பிறவா நிலையை அறியாததால்… நீ இங்கு காணும் கனவையும் நிஜம் என ஏற்றுக் கொள்கிறாய்!

முதலில், நான் என்பது சுய அறிவே என அறிவாய்! 

சுய அறிவில் நிலைத்து… உன் ஆதாரத்தை, நித்தியத்தை அறிந்தவுடன்…

காணும் கனவில் இருந்து முழுமையாக விழித்து, உன் உன்னத உண்மை நிலையில், அமிர்த நிலையில் நிலைத்து இருப்பாய்! ”

என போதிப்பார்…!

கே: பயம் வருகிறது….!

உன் சுய அறிவு தனது எல்லை அற்ற நிலையை அறியாமல், தன்னை எல்லைக்குள் சிறு வடிவமாக குறுக்கி கொள்வதால், தனது அல்லாத ஒன்றை தானாக ஏற்றுக் கொள்வதால்…. பயம் என்கிறது.

தனித்த அடையாளம் – தன் இயல்புக்கு மாறான அடையாளம்.!

தன் இயல்புக்கு மாறாக தன்னை ஒப்புக் கொள்வதால்… இத்தகைய… இயல்பற்ற அச்சம் ….

அச்சமின்மையே ….உனது இயல்பு!

இயல்பாக இருந்தால் அச்சம் எதற்கு?

இயல்பாக இல்லாமையே அச்சத்திற்கு காரணம்.

இயல்பாக இருத்தல் என்பது… கண்களை மூடி, உள் இருக்கும் அமைதியை அறிதல்… அமைதியில் தன் இருப்பை அறிதல்!

சுயமாக தன் இருப்பை அமைதியில் அறிதல் – நான் எனும் சுய அறிவு!

உன் இருப்பை நீ அறிய எந்த அடையாளமும் தேவை இல்லை !

உனக்கே உன் இருப்பு அமைதியில் தெரிகிற போது… எந்த அடையாளம் வழியே உனை அறிய முற்படுகிறாய்?

எனவே தான் அடையாளங்களில் தடுமாறு கிறாய்?

அடையாளங்கள் நீ அல்ல!

இதை முதலில் அறிந்தால் …

தான் அமைதியில் அறியும் சுய அறிவே என அறிந்தால்… அச்சம் என்பது எங்கே?

அமைதி அஞ்சாது!
அடையாளங்களால்….தேவையற்ற அச்சமே!

கே: ஓடவும் முடியவில்லை! விடவும் முடியவில்லை!

எதைக் கண்டு ஓடுகிறாய்?

எதற்காக ஓடுகிறாய்?

எங்கே ஓடுகிறாய்?

இங்கு உனை தவிர்த்து ஏது உள்ளது?

காணும் அனைத்தும் எங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் ( ‘I am ness’ Consciousness) தானே?

இங்கு அனைத்தும் உன் சுய அறிவே என அறிந்தால்… அமைதியாக அல்லவா கவனிப்பாய்?

அறியாததால்….. ஓட்டம் என கூறுகிறாய்….!
அறிந்தால்…. இங்கு என் ஒளியில் காணும் அனைத்தும் என் பிரதிபலிப்பே என அறிந்தால்…

அமைதியில் நிலைத்து… கவனிக்க தொடங்குவாய்!

எங்கு ஓடுவது?

எங்கு சென்றாலும் பரவெளியில் என் சுய இருப்பில் அல்லவா அனைத்தும் நிகழ்கிறது?

என் இருப்பை தவிர இங்கு எது உள்ளது?

கே: எதை விடுவது?

இங்கு அனைத்தும் தானாகவே தற்போது நிகழ்கிறது!

அனைத்தும் உன் சுய அறிவில்… சுய அறிவால் தற்போது ….

உனக்கு அன்னியமானது எதுவும் இல்லை எனில்…எதை நீ விட முயற்சிக்கிறாய்?

முயன்று பார்…. தோல்வி நிச்சயம்!

முயற்சி அற்ற நிலையில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது….

இதை அறியாததால்…. விடவும் முடியவில்லை! என சொல்லப் படுகிறது!

உன் சுய அறிவில் அனைத்தும் தானாகவே தோன்றுகிறது நிகழ்கிறது… மறைகிறது எனில்….

தோன்றும் அனைத்தும் கனவே… நிஜம் இல்லை எனில்….

காணும் கனவில் எதை கண்டு நீ ஓடுகிறாய்?

எதை விட முயலுகிறாய்…?

சற்றே ஆராயவும்!

கே: எனை கை தூக்கி வெளியே கொண்டு வருவீர்களா?

பார்க்கும் நீ …. பார்ப்பதற்கு அப்பால் தற்போதே!

பார்க்கும் நீ பிறப்புக்கு அப்பால்!

பார்ப்பது எதுவும் நீ அல்ல!
எனில், எதை நீ ….
உனதாக ஒப்புக் கொண்டு இப்படி ‘எனை வெளியே கொண்டு வருவீர்களா?’ என கேட்கிறாய்?

எனது போதனையே!
நீ அற்புத நிலையில், பிறவா நிலையில் ஏற்கனவே நித்தியத்தில் இருக்கிறாய்.

இங்கு எதுவும் நிகழவில்லை!

நிகழ்வுகள் நீ அல்ல! என்பதே!

பார்க்கும் நீ பிறப்பற்ற நித்தியம்!

காண்பது அனைத்தும்…
வடிவ அளவில்….
பர வெளியில் தானாக நிகழும் கனவே எனில், இங்கு தேவை விழிப்பு தானே …?

இதை அறிந்தால்… பார்க்கும் கனவில் இருந்து இப்போதே விமோசனம் தானே?

இப்போதாவது அறிவாய்!
எனது போதனைகளின் மகத்துவத்தை!

அனைத்தும் உன் சுய அறிவை விழிக்க வைக்கவே!

அறிந்தால்…எல்லையற்ற ஆனந்தமே!
🌷🌻🌷