" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், விழிப்பு, உறக்கம், கனவு நிலைகள் இவை எதுவும் நான் அல்ல என்று நீங்கள் கூறும்போது எனக்கு அது புரிகிறது.. , இருந்தும் ஏன் நான் இன்னும் உண்மையை உணரவில்லை?

April 7, 2023 | 76 views

ஜியெம்: நீ ஏற்கனவே, அற்புத உன்னத நிலையில் இருக்கிறாய்!

உன் அற்புதம் உனக்கு தெரிவதே இல்லை!

விழிப்பு, கனவு,உறக்கம் இவை எதுவும் நீ அல்ல என்பதை வார்த்தைகளால் புரிந்து கொள்ள இயலாது.

வார்த்தைகளுக்கு முந்தைய அமைதி நிலையில் நிலைத்து அறிய முடியும்!

நான் சொல்வது வெறும் உலகச் செய்தி அல்ல!
உன்னைப் பற்றிய செய்தி!
உன் அமிர்த பிறவா நிலையை பற்றிய செய்தி!

இதை அறிந்தவரால் மட்டுமே கொடுக்க முடியும் என அறிந்தால் , இச்செய்தியை நீ தவற விட மாட்டாய்!

விழிப்பு, கனவு, உறக்கம் இந்த மூன்று நிலைகளுக்கும் முந்தைய நிலையிலேயே தற்போதும் இருக்கிறாய்!

ஆனால் உனக்கு தெரிவதே இல்லை!

ஏன்?

அமைதியில் நிலைத்து அடையாளமின்றி உன்னால் கவனிக்க இயலவில்லை!

நீ இல்லாத அடையாளத்திற்கு முக்கியம் கொடுக்கிறாயே ஒழிய, இருந்து கொண்டே இருக்கும் உன் அற்புதத்திற்கு முக்கியம் தருவதே இல்லை!

உனக்கு, உன் சுயஅறிவுக்கு முக்கியம் கொடுத்து அமைதியில் நிலைத்தால் என் போதனைகள் நன்கு அறியப்படும்!

நிஜமற்ற அடையாளங்களை தனது என்று ஒப்புக்கொள்ளும் வரை ….

விழிப்பு, கனவு, உறக்கத்தை பற்றிய எனது போதனை உனக்கு வெறும் செய்தியாகவே இருக்கும்.

போதனைகளால் தன்னை அறிவதை விட்டு, அவற்றை வெறும் செய்தியாகவே பார்க்கும் உன்னால் எப்படி உண்மையை அறிய இயலும்?

புரிகிறதா? இப்போதாவது?

🦋🌸🦋