" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், விதையில் மரம் மறைந்து இருப்பது போல, சுதந்திரம் எனக்குள் மறைந்துள்ளது எனில் அது வெளிப்பட்டு வளர நான் என்ன சாதகம், பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்?

November 16, 2022 | 217 views

ஜியெம்:

உன் சுதந்திர தன்மையை அறிய எந்த சாதகமும் தேவை இல்லை.

உன் சுய அறிவில் (Consciousness) நிலைத்து இருந்தால் அதுவே போதுமானது.

சுதந்திரம் என்றால் என்ன?

சுதந்திரம் என்பது எது இங்கே?

இங்கே எது உள்ளது?

உன் சுய அறிவைத் ( Consciousness) தவிர !

அனைத்தும் எங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் தானே?

நான் எனும் சுய அறிவில் தோன்றி சுய அறிவில் மறையும் தோற்றங்கள் அனைத்தும் உனது சுய அறிவில் இருந்து வெளிப்படுகிறது தற்போது.

இங்கு நான் எனும் இருப்பில் அனைத்தும் தோன்றி மறைகிறது.

நீ காணும் அனைத்தும் உன் சுய அறிவின் பிரதிபலிப்பே!

இதை நீ சற்றும் அறிந்திலாய்!

அறிந்தால்… எல்லை அற்ற உன் இருப்பில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என அறிவாய்!

கண்களை மூடி அமைதியில் நிலைத்தால், எல்லை அற்ற உன் இருப்பும், அளவிலா ஆனந்தமும் அறியப்படும்!

இங்கு உன் இருப்பை தவிர எதுவுமில்லை என்றால்…

உனக்கு அன்னியமானது எதுவுமில்லை எனும் போது… யாரிடத்தில் சுதந்திரம் எதிர்பார்க்கிறாய்?

நீ பரந்த விரிந்த எல்லையற்ற அமைதியின் ஆனந்தம்!

நீ வடிவமாக உன்னை ஒப்புக்கொள்வதால், தனித்த அடையாளமாக கொள்வதால், பார்க்கும் அனைத்தில் இருந்தும் விடுதலை கேட்கிறாய்.

வடிவத்திற்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற உன் இருப்பை அமைதியில் அறிந்தால், இக்கேள்வி எழாது.

கண்களை மூடவும்.

அறியவும் அமைதியை!

உள்ளிருக்கும் ஆனந்தத்தை!

கண்களை விரித்து பார்த்தாலும், உன் சுய அறிவே (Consciousness) அனைத்துமாக இங்கே தோன்றுகிறது எனில் காணும் எதில் இருந்து உனக்கு விடுதலை தேவை?

சற்றே ஆராயவும்!

பார்க்கும் நீ பார்ப்பதில் இருந்து ஏற்கனவே விடுபட்டு சுதந்திரமாக உள்ளாய்!

பார்ப்பது நிஜம் அல்ல!

காணும் கனவே என அறிவதே நிஜமான விடுதலை!

நீ பார்ப்பவராகவே இருக்கிறாய் எப்போதும் எனில்…..

பார்ப்பது எதுவும் நீ இல்லை எனில் இங்கு விடுதலை எனும் இருமை நிலையில் இருந்து விழித்து கொண்டு உன் உன்னத அற்புதத்தை அறிய ஆரம்பித்து விடுவாய்!

விழிப்பே…விடுதலை … 

விழிக்கும் வரை கனவே சுமையாகவும், நிஜமாகவும் இருப்பதால் ….இக்கேள்வி…

விடை … விழிப்பில் இருக்கிறது…

விழிப்படைவாய் விரைவில்