" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! நான் முக்தியை அடைய முடியுமா? அதற்கு வழிகள் ஏதேனும் உள்ளதா?

April 30, 2022 | 92 views

ஜியெம்: முக்தி – பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலையில் இருந்து விடுபடுவதே!

நீ ஏற்கனவே பிறவா உன்னத நிலையில் இருக்கிறாய்!

இதை நீ அறிவதே இல்லை!

இங்கு பரவெளியில் காணும் வடிவங்களும், நிகழ்வுகளும் நிஜம் என கொள்வதால் உனக்கு பிறப்பு, இறப்பு இவை நிஜம் என ஒப்புக் கொள்கிறாய்!

எனவே இந்த இருமை நிலையில் இருந்து விடுபடுவதை முக்தி என அழைக்கிறாய்!

நீ சற்றும் அறியாய்…

இங்கு காண்பது கனவு நிலை என்றும்! எதிலும் சிறிதும் நிஜம் இல்லை என!

கனவை…… கனவு என்று எப்போது அறியப்படுகிறது?

விழித்த பின்னர் தானே?

தற்போதும், இந்த வடிவமும் அதன் வழியே காணும் காட்சிகளும் கனவே!…. நிஜம்… காணும் எதிலும் இல்லை என எப்போது அறியப்படுகிறது?

விழித்த பின்பே!

உன் சுய அறிவு வடிவ அடையாளத்தில் கனவில் மயங்கி தடுமாறுகிறது….தன் இருப்பை அறியும் வரை…

தன் இருப்பு என்பது….. தற்போது அமைதி நிலையில் தன் இருப்பை அறிவதே!

அமைதியில்… விழிக்க தொடங்கும்….சுய அறிவு….

தன் ஆதாரத்தில் நிலைத்து

தன்னை கடந்த நிலையில்

தன் முழுமையை…… பிறவா நித்தியத்தை அறிகிறது!

தற்போது பிறப்பு , இறப்பு எனும் இருமை அற்ற நிலையில்….

தான் பிறக்கவில்லை என்றும், பிறந்தது கனவே என்றும்…தான் பார்த்ததில் எதுவும் நிஜம் இல்லை எனவும் அறிகிறது…..!

பிறவாத ஒன்றுக்கு ஏது முக்தி?

பிறந்தது கனவே எனில்…

இங்கு எது முக்தி அடைகிறது?

கனவினில் நிகழ்வுகள் நிஜமாகுமா?

நிஜம் இல்லை எனில் எது, எதில் இருந்து முக்தி அடைகிறது?

பார்க்கும் நீ இருமை அற்ற ஒன்று!

இருமை நிலையில் அனைத்தும் தானாகவே தோன்றி நிகழ்கிறது!

தோற்றமும் மறைவும் நிஜம் ஆகுமா?

நிஜம் இல்லை எனில் எதற்கு முக்தி தேவைப்படுகிறது?

இங்கு தனித்து ஏதும் இல்லை எனில்….அனைத்தும் …

பிரபஞ்சம், கோள்கள், உயிரினங்கள் உட்பட  தானாகவே உன் சுய அறிவில் தற்போது நிகழும் கனவு எனில் ….

பார்ப்பது எதுவும் நீ இல்லை எனில்…..

இங்கே எது முக்தி அடைகிறது?

இந்த பேருண்மையை அறிய உன் சுய அறிவு தான் காணும் வடிவ அளவின் கனவில் இருந்து விழித்தல் அவசியமாகிறது!

பார்க்கும் நீ உன்னதம்!

பார்ப்பது அனைத்தும் ஒளியின் விளையாட்டு எனில் இங்கு எதற்கு தேவை முக்தி?

பார்க்கும் நீ ஒளியின் ஆதாரம்! (source)

பார்ப்பது ஒளியின் விளையாட்டு! (play by Consciousness)

அறிய வேண்டியது – இங்கு பார்க்கும் எதுவும் நிஜம் இல்லை! கனவே ….என்பதே!

இதை அறிய முதலில் கனவில் இருந்து விழித்தலே அவசியமாகிறது!

பார்ப்பவர் மட்டுமே நித்தியம்!

அறியவும்…முழுமையான விழிப்பில்!