" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், விழிப்பு நிலையில் நான் யார் என்று தன் சுயத்தை (சுய அறிவை) அறிந்து கொள்வது போன்று, ஆழ்ந்த உறக்க நிலையில், உணர்வை (தன்னை) உணர முடியாமல் தன்னிலை மறந்து போவது ஏன்?

September 15, 2022 | 81 views

ஜியெம்:

சுயம் என்றும் இருக்கிறது.

அது தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது.

அந்த ஊடகம் தான் வடிவங்கள்.

சுயத்திலிருந்து தானாக தோன்றும் அணுக்களின் தொடர் வினையால் இந்த வடிவம் நிகழ்கிறது தற்போது!

இந்த வடிவம் வழியாக தன் இருப்பை ‘நான் இருக்கிறேன்’ என அமைதியில் அறிகிறது.

இதுவே சுய அறிவு!

இது வார்த்தைகளுக்கு முந்தைய நிலை!

இங்கு நான் என்பதே …சுய அறிவு தான்!

வடிவம் அல்ல!

இந்த சுய அறிவில் தான் அகிலம்,கோள்கள், பிரபஞ்சம், அனைத்து வடிவங்களும் படைக்கப்படுகிறது.

சுய அறிவு இல்லையேல், இங்கு எதுவுமில்லை!

தற்போது உன் சுய அறிவே இக்கேள்வியை கேட்கிறது.

விழிப்பு நிலை முழுவதும், சுய அறிவு தன் இருப்பை அறிகிறது.

அதன் இருப்பில் அனைத்து நிகழ் வுகளும் தோன்றி மறைகிறது…

மாறிக்கொண்டே இருக்கிறது.

நிகழ்வுகள் தான் மாறுகிறதே ஒழிய, நான் எனும் அறிவு மாற்றமில்லாமல் இருந்துக் கொண்டே இருக்கிறது.

உறக்கத்தில் நான் எனும் இருப்பு மறைகிறது.

தன் இருப்பு தன்னால் அறியப்படுவது இல்லை!

நான் எனும் இருப்பில் தான் காணுகின்ற பிரபஞ்சத்தின் வித்து உள்ளது.

நான் எனும் இருப்பில் பிரபஞ்சமே மறை நிலையில் உள்ளது.

இந்த மறை நிலை வித்தே, வெளியில் அனைத்து தோற்றங்களாக காட்சி அளிக்கிறது.

அகிலம் நான் எனும் அறிவில் நிகழ்கிறது!

நான் எனும் அறிவிற்கு ஒரு வடிவம் தேவைப்படுகிறது!

வடிவத்திற்கு உணவு தேவைப்படுகிறது!

இப்போது சொல்லவும்?

அகிலம் எதில் உள்ளது?

உணவில் தானே?

உணவின்றி வடிவமில்லை!

வடிவமின்றி, சுய அறிவில்லை!

சுய அறிவின்றி, அகிலமில்லை!

இந்த வடிவத்திற்கு ஒவ்வொரு நான்கு முதல் ஐந்து மணி நேரமும் உணவு வழங்க வேண்டும்.

உண்ட உணவு உள்ளே பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு பின்பு எரிக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட வெப்பம் நிகழ்கிறது.

இந்த வடிவத்தின் வெப்பத்தில் தான் நான் எனும் அறிவு அறியப்படுகிறது.

விழிப்பு நிலை முழுவதும் குறிப்பிட்ட வெப்ப நிலையில் நான் எனும் அறிவு வடிவம் வழியாக அறிப்படுகிறது.

உறக்கம் வரும் போது….இந்த வெப்பம் குறைந்து கொண்டே வருகிறது….

ஒரு குறிப்பிட்ட குறைந்த வெப்பத்தில் நான் எனும் அறிவும் அறியப்படுவதில்லை!

இதுவே ஆழ்ந்த உறக்கம் என சொல்லப் படுகிறது!

இப்போது அணுக்களின் தொடர் வினை மிக மிக குறைந்த அளவில் நிகழ்கிறது….

ஒரு குறிப்பிட்ட உறைந்த வெப்பத்தில்…

வடிவமும், நான் எனும் இருப்பும் அறியப்படுவதில்லை!

பின்னர் மெல்ல,மெல்ல, அணுக்களின் தொடர் வினையின் வேகம் அதிகரித்து தானாகவே நான் எனும் அறிவு அறியப்படுகிறது.

இந்த நான் எனும் அறிவு சார்புத் தன்மையுள்ளது.

இந்த நான் எனும் அறிவு, வடிவத்தையும், உணவையும் சார்ந்துள்ளது.

விழிப்பு நிலையில் அறியப்பட்டு உறக்கத்தில் மறைகிறது எனில் எப்படி உண்மையாகும்?

இந்த அறிவே தோன்றி மறைகிறது எனில் இதில் தோன்றி மறையும் வடிவங்களும், அகிலம், அனைத்து நிகழ்வுகளும் எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?

இதை முதலில் ஆராயவும்!