" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், தானாகவே காலையில் விழிக்கின்றேன், தானாகவே வடிவங்கள் தென்படுகின்றன, எனது வடிவம் உட்பட, பின் தானாகவே அனைத்து நிகழ்வுகளும் என்னை சுற்றி நிகழ்கின்றன. இரவில் தானாகவே தூக்கத்தில் விழுகிறேன், தானாகவே கனவு உண்டாகிறது, தானாகவே கனவு மறைகிறது, தானாகவே ஆழ்ந்த தூக்கம் உண்டாகிறது, பின் காலையில் தானாகவே கண் விழிக்கின்றேன். தானாகவே நடந்து கொண்டு இருக்கும் இந்த பிம்ப விளையாட்டில் எனது பங்குதான் என்ன? தேவை இல்லாமல் கவலைப் படுகின்றேனே!

November 7, 2022 | 169 views

ஜியெம்:

அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என அறிந்தால், எப்படி கவலைப்பட முடியும்? 

சுய அறிவு என்பதே ஆனந்தம் தானே!

சுய அறிவு தன்னை தனித்த வடிவமாகவும், தன்னில் இருந்து அனைத்தும் விடுபட்டு இருப்பதாகவும் ஒப்புக் கொள்கிறது! எனவே கவலையுறுகிறது!

கே: இந்த வடிவ விளையாட்டில் எனது பங்கு என்ன?

விளையாடுவது வடிவமா?

சுய அறிவா?

சுய அறிவின்றி, வடிவம் நிகழுமா? இயங்குமா?

இங்கு அனைத்து இயக்கமும் வடிவம் வாயிலாக, சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது!

உன் சுய அறிவில், நிலைத்தால், அனைத்து இயக்கங்களும் தானாகவே சுய அறிவால் இயக்கப்படுகிறது என எளிமையாக அறியலாம்.

கே: எனது பங்கு என்ன? நான் ஏன் தேவை இல்லாமல் கவலை படுகிறேன்?

தற்போது உனக்கு அனைத்தும் நிஜமாக தோன்றுகிறது இல்லையா?

கவலையுறுதல் எதனால்?

அனைத்தும் நிஜம் என கொள்வதால்!

நிஜம் அற்ற நிகழ்வுகள் எப்படி நிஜமாக உள்ளது?

நிஜம் எது என அறியாததால், நிஜம் அற்றதும் நிஜமாக கொள்ளப்படுகிறது!

காணும் படக்காட்சிகள் நிஜம் என கொள்வது போலத்தான் இதுவும்!

இவை அனைத்தும் கனவு தான் என அறிதல் அவசியமாகிறது.

நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது!

சுய அறிவு மறைந்தால் அனைத்தும் மறைகிறது.

எனவே, சுய அறிவு எங்கு தோன்றி எங்கு மறைகிறது என அறிதல் அவசியம்.

சுய அறிவு தன் ஆதாரத்தை அறிவதே சுய அறிவின் நோக்கமாகும்.

சுய அறிவு தன் இருப்பில் , அமைதியில் கண்களை மூடி நிலைக்கும் போது, தன்னை கடந்து, தன் ஆதாரத்தை, நித்தியத்தை, பிறவா உன்னதத்தை அறிகிறது.

அறிந்த பின் , எல்லை அற்ற ஆனந்தத்தை, அமிர்த நிலையை அறிகிறது!

தன்னை, தன் முழுமையை, அறிந்தால், இருமை அற்ற நித்தியத்தில், பரி பூரணத்தில்….

விழித்த சுய அறிவிற்கு, கவலைகள் ஏதுமில்லை!

விழிக்கும் வரை கனவே நிஜமாக உள்ள வரை கவலைகளும், நிஜமாகவே தோன்றும்!

உனது பங்கு கனவில் இருந்து விழித்து உன் பரி பூரணத்தை அறிதல்!

அறிந்தால், இங்கே எல்லை அற்ற ஆனந்தமே,!