" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! சுய அறிவு (Consciousness) தான் அனைத்து காட்சிக்கும் காரணம் என்று புரிந்தாலும், நான் பார்ப்பவர் (observer) என்று நிலைத்து நிற்க முடியவில்லை. விவகாரம் என்று வரும்போது எதிர்வினை (react) பண்ண வேண்டி உள்ளதே, இதை தவிர்க்க ஏதாவது பயிற்சி உள்ளதா?

April 30, 2022 | 98 views

 ஜியெம்: முதலில் அறிய வேண்டியது :

நான் எனும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே தற்போது நிகழ்கிறது!

பார்க்கும் நீ சுய அறிவிற்கும் அப்பால்!

பார்க்கும் நீ, தற்போது நித்தியம்!

இதை அறிவதே இல்லை!

இங்கு சுய அறிவில் காணும் அனைத்தும் கனவின் நிகழ்வுகளே!

சிறிதும் நிஜம் இல்லை!

கே: விவகாரம் என்று வரும் போது அடையாளம் கொள்ள வேண்டி உள்ளதே, இதை தவிர்க்க ஏதாவது பயிற்சி உள்ளதா?
இக்கேள்வி முற்றிலும் தனித்த அடையாளத்தில் (personality) கேட்கப்படுகிறது.

என் போதனையே….
இங்கு தனித்து எதுவும் இல்லை என்பதே!

அனைத்தும் எங்கு நிகழ்கிறது?

சொல்லவும்!

நான் எனும் சுய அறிவில் தானே?

சுய அறிவு தானாக காலையில் தோன்றி… உறக்கத்தில் மறைகிறது அல்லவா?

தானாக தோன்றி மறையும் சுய அறிவில் (‘I am ness’ Consciousness) தானே அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது தற்போது!

உனது பணி அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாக கவனிப்பதே!

விவகாரம் என்று வரும் போது தற்போதைய நிகழ்வுக்கு பதில் (response) அளிப்பதை விட்டு எதிர் வினை (react) ஆற்றக் கூடாது.

தற்போதைய நிகழ்வுக்கு பதில் அளிக்கும் போது இல்லாத கடந்த காலத்தில் இருந்து விடுபடுகிறாய்!

பதில் அளித்தவுடன்…அந்த நிகழ்வில் இருந்து விடுபடுகிறாய்…..!

எதிர்வினை ( react ) ஆற்றும் போது நிகழ்காலத்தில், இல்லாத கடந்த காலத்தை ஒப்பிடுகிறாய்!

அனைத்து நிகழ்வுகளும் உன் சுய அறிவில்…. சுய அறிவால் நிகழ்கிறது எனில் …

நீ கலக்கமுற அவசியம் ஏதுமில்லை!

அன்றைய நிகழ்வுக்கு அப்போதே பதில் அளித்து அந்த நிகழ்வில் அப்போதே இருந்து விடுபடும் பொழுது….

எந்த செயல் இப்போது உனை பாதிக்கும்?

சொல்க!

கே: இதை தவிர்க்க ஏதாவது பயிற்சி உள்ளதா?

கண்களை மூடவும்!

அமைதியை அறியவும்!

அமைதியில் உன் இருப்பு அறியப்படுகிறது அல்லவா?

இந்த அமைதியில் நிலைக்கவும்!

அனைத்து நிகழ்வுகளையும் அமைதியில் கவனிக்கவும்!

அமைதி என்பது அசைவற்றது!

அமைதியாக இருக்க …………

அமைதியில் நிலைக்க………..

அமைதியில் கவனிக்க………..

எந்த முயற்சியும் தேவை இல்லை!

முயற்சியற்ற அமைதி நிலைக்கு எந்த பயிற்சியும் தேவை இல்லை!

ஓய்வாக இருக்கும்போது கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியை அறிவது மிகவும் அவசியமாகிறது!

அமைதியில் நிலைக்கும் போது…

அடையாளங்களில் தடுமாற்றம் நிகழாது.

இங்கு அனைத்தும் உன் சுய அறிவில் மட்டுமே ( Consciousness) நிகழ்கிறது என்று அறிவதே அனைத்தில் இருந்தும் விடுபட முதற்படியாக அமையும்!

அனைத்தும் உன் சுய அறிவில் மட்டுமே தற்போது நிகழும்போது…

உனக்கு என்ன பணி இங்கே?

அமைதியாக கவனிப்பதே!

அமைதியாக கவனிக்கும் போதே உன் சுய அறிவு (Consciousness) தான் காணும் புவி, பிரபஞ்சம், கோள்கள், அனைத்து உயிரினங்கள் என்கிற கனவில் இருந்து மெல்ல விழிக்க தொடங்குகிறது!

தொடர் அமைதியில் சுய அறிவு ( Consciousness) முற்றிலுமாக விழித்து

தன் ஆதாரத்தை அறிந்து

பிறப்பு, இறப்பு, புவி , பிரபஞ்சம், உயிரினங்கள் எனும் வடிவக் கனவில் இருந்து விழித்து

தன் முழுமையை, பிறவா உன்னதத்தை , அற்புதத்தை அறிகிறது!

அறிந்தால் ஆனந்தமே!

சுயம் , தன் முழுமையை அறிய எவ்வித முயற்சியும் தேவை இல்லை!

அனைத்து விவகாரங்களும் கனவின் நிகழ்வே!

தனக்கு ஒன்றுமே நிகழவில்லை என அறிவதே தலையாய பணியாகும் இங்கே!

அறிவாய் இதை தற்போதே..!