" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், சும்மா இரு! இதை விளக்கவும்.

October 31, 2022 | 92 views

ஜியெம்:

சும்மா இரு என்றால் வெறுமனே எவ்வித ஈடுபாடும் இன்றி பார்த்தலே ஆகும்.

சுய அறிவானது அனைத்தையும் அடையாளம் கொள்வதால் அனைத்தையும் நிஜமெனவே ஒப்புக் கொள்கிறது. 

நீ சுய அறிவுக்கும் அப்பால், பார்ப்பவர் ஆக இருக்கிறாய்!

ஆயினும், பார்க்கும் நிகழ்வுகளால், தன்னை அறியாமல் தடுமாறுகிறாய்.

பார்க்கும் நீ எதுவும் செய்ய வில்லை!

உன் பார்த்தலில் தான் அகிலம்,அண்டம் முதலிய உள்ளன.

தற்போது உனது பார்த்தலில் தான் அகிலம், பிரபஞ்சம் நிகழ்கிறது. இல்லையா?

உன் சுய அறிவின்றி இங்கு அகிலமமும் இல்லை! பிரபஞ்சமும் இல்லை!

உன் சுய அறிவே தற்போது நீ காணுகின்ற அனைத்தையும் படைத்து, அவற்றின் வழியாக இயங்கவும் செய்கிறது. 

உன் சுய அறிவும், அகிலம் வெவ்வெறு அல்ல!

அனைத்து செயல்களும்… மூச்சு விடுதல், இதய துடிப்பு,. வளர்சிதை மாற்றங்கள் ஆகியவை உன் முயற்சியின்றி தானாகவே நிகழ்கிறது.

நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா?

ஒவ்வொரு செயலும் தானாகவே சுய அறிவால் செய்யப்படுகிறது.

நீ எதுவும் செய்யவில்லை!

அனைத்து செயல்களும் சுய அறிவால் செய்யப்படுகிறது.

நான் நடக்கிறேன், சாப்பிடுகிறேன்…அனைத்தையும் செய்கிறேன் என சொல்லலாம்.

எனது கேள்வி: உன் சுய அறிவின்றி, இங்கு செயல்கள் இருக்குமா? என்பதே!

இங்கு அனைத்து செயல்களும் உன் சுய அறிவால் செய்யப்படுகிறது.

ஆனால், இதை அறியாது நீயே செய்வதாக அடையாளம் கொள்கிறாய்.

உனது வடிவம் சுய அறிவில்லாமல் செயல்படுமா?

உன்னில் உயிர்ப்புடன் இருக்கும் சுய அறிவில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது என அறியவும்!

எனவே, நீ எதுவுமே இங்கு செய்யவில்லை!

அனைத்தும் சுய அறிவால் செய்யப்படுகிறது!

அனைத்தும் சுய அறிவால் செய்யப்பட்டால், பின்…

அனைத்தையும் பார்ப்பவர் யார்?

பார்ப்பவர் நீயே!

இங்கு நிகழும் அனைத்தையும் அமைதியாக பார்ப்பவர் நீயே!

பார்ப்பவர் இங்கு எதுவும் செய்யவில்லை!

பார்ப்பவர் மாற்றமில்லாத, அசைவற்ற என்றும் இருந்து கொண்டே இருக்கின்ற… நித்தியம் 

அது நீயே!

சுய அறிவுக்கும் அதில் தோன்றும் அனைத்திற்கும் முன்பாகவே பார்க்கின்ற நீ உள்ளாய் என்பதை நீ அறிவதே இல்லை!

உன் சுய அறிவில் தான் அனைத்தும் தோன்றி மறைகிறதே ஒழிய, பார்க்கும் நீ எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்ற நித்தியம் என்பதை அறிவதே இல்லை.

சும்மா இரு எனில் அமைதியில் அனைத்தையும் கவனித்தலே!ஏனெனில் இந்த அமைதியானது அதன் ஆதாரத்தில் என்றும் நிலை கொண்டுள்ளது.

சுய அறிவே அனைத்தையும் செய்கிறது எனில், அனைத்தையும் அமைதியாக பார்க்கும் உனக்கு என்ன வேலை இங்கே?

இதையே சும்மா இரு என சொல்லப்படுகிறது.

இப்போது அமைதியாக கவனிக்கிறாய்… மூச்சு விடுதலும் மற்ற செயல்களும் இந்த வடிவம் வழியாக தானாகவே உன் சுய அறிவில் தற்போது நிகழ்கிறது அல்லவா?

இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா நீ எதுவும் செய்யவில்லை, பார்க்கவே செய்கிறாய் என? 

நிச்சயமாக ஒப்புக்கொள்வாய்…வார்த்தைகள் அற்ற அமைதியில் நிலைக்கும் போது!