" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், காலை எழுந்ததில் இருந்து, இரவு உறங்கும் வரை அனைத்து செயல்களும் சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது. இதில் நான் எங்கிருந்து வந்தேன்? இதில் நல்லது, கெட்டது, பயம், குற்ற மனப்பான்மை, மரணம் என்பதெல்லாம் எங்கிருந்து முளைத்தது? விளக்கவும்?

February 16, 2023 | 85 views

ஜியெம்:

இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது?

நிச்சயமாக, ‘நான்’ இந்த வடிவம் தான் என்கிற அடையாளத்தில் தான்.

நீ இந்த வடிவம் தான் என்றால், இந்த வடிவம் எதனால் இயங்கப்படுகிறது?

இந்த வடிவம் என்பது என்ன?

அணுக்களின் தொடர் வினை தானே? 

கோடானு கோடி அணுக்களின் தொடர்ந்த வினையாற்றலில் தான் இந்த வடிவம் இருக்கிறது.

இந்த அணுக்களின் தோற்றமும் மறைவும் அதிவேகத்தில் தற்போது நிகழ்கிறது….

இந்த இயக்கம் எதனால்?

உன் சுய அறிவில் தான் அனைத்தும் தோன்றுகிறது.

சுய அறிவின் ஆற்றல் எல்லையற்றது.

இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!

இந்த சுய அறிவு படைப்பாற்றல் உள்ளது.

காணுகின்ற, அகிலம், பிரபஞ்சம், கோள்கள், அனைத்து உயிரினங்களும் …இந்த சுய அறிவால்….தற்போது படைக்கப்படுகிறது.

சுய அறிவு வடிவத்தை படைத்து அதன் வழியே இயங்குகிறது…

சுய அறிவின்றி இயக்கமில்லை!

சுய அறிவே இந்த வடிவத்தை படைத்து, இயக்குகிறது…..

வடிவத்தின் அணுக்கள் இயங்காதபோது , வடிவம் தான் மறைகிறதே ஒழிய, சுய அறிவு…. மாற்றமில்லாமல் இங்கேயே இருக்கிறது….

இங்கு நான் என்பது வடிவம் அல்ல!

எல்லை அற்ற சுய அறிவே!

எல்லை அற்ற உன் இருப்பு… தற்போது இந்த வடிவம் வாயிலாக, தன்னை ஒரு தனித்த அடையாளமாக ஒப்புக் கொள்கிறது.

பிரபஞ்ச மயமான அறிவு தன்னை வடிவமாக ஒப்புக் கொள்கிறது.

அதனால், தான் வேறு, பிரபஞ்சத்தில் தோன்றும் அனைத்தும் தன்னில் இருந்து வேறுபட்டதாக ஒப்புக் கொள்கிறது.

வடிவமற்ற ஒன்று, தன்னை வடிவமாக ஒப்புக்கொள்வதால், இருமை நிலை…

இருமை நிலையில் பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அடையாளம் கண்டு தடுமாறுகிறது…..

தடுமாற்றமே தன்னை அறியாதார் தானே?

தன்னை அறிந்தால் தடுமாற்றம் ஏது?

சுய அறிவு தன் ஆதாரத்தை அறிதல் அவசியம்!

தன் ஆதாரம் பிறப்புக்கும்,இறப்புக்கும் அப்பாற்பட்ட உன்னத நித்தியம் என அறியும் வரை… வடிவ அடையாளம் நிஜம் அல்ல,

தற்போது நான் என்பது சுய அறிவே என அறிந்தால் நிஜ விழிப்பு தொடங்குகிறது…..

தொடர்ந்து நிஜ விழிப்பில் நிலைக்கும் போது…..

விழிப்பு முழுமை யுற்று….

நான் எங்கிருந்தும் வரவில்லை….

எனக்கு பிறப்பில்லை, இறப்புமில்லை,

நான் இங்கேயே இருந்து கொண்டு இருக்கிற நித்தியம் என அறிகிறது.

நான், வடிவம் எனும்போது… சுய அறிவு விழிக்காமல்… இருமை நிலையில் நிஜமற்ற நிகழ்வுகளை ஆதரிக்கிறது…

நான் சுய அறிவு எனும் போது அமைதி நிலையில் கவனித்து தன் பேராற்றலில் நிலைக்கிறது.

சுய அறிவு தன்னை மாறாக (வடிவமாக) அடையாளம் கொள்வதால்….. தடுமாறுகிறது.

தன்னை சரியாக, சுய அறிவாக அடையாளம் கொள்ளும் போது….

தன் உன்னத உண்மையின் உச்சத்தை அறிகிறது.

‌****