" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், கனவு காண்கின்ற பொழுது நாம் அந்த கனவிற்குள் சென்று கனவை மாற்ற இயலாது ! அது போலவே விழிப்பு நிலையில் சுய அறிவு உதித்தவுடன் காலை முதல் இரவு உறங்கும் வரை இங்கே நிகழும் அத்தனை நிகழ்வுகளும் கனவே! இதில் எந்த நிகழ்வையும் என்னால் மாற்ற இயலாது….! என என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மாற்ற முயற்சித்து துன்புறுகிறேனே…..ஏன்?

November 2, 2022 | 136 views

ஜியெம்:

இங்கு நான் என்பது எது?

காணும் நிகழ்வுகளா?

நிகழ்வுகள் எங்கு நிகழ்கிறது?

உன் இருப்பிலா?

பர வெளியிலா?

பரம் எங்கு உள்ளது?

உன் நான் எனும் இருப்பில் தானே அனைத்தும் நிகழ்கிறது தற்போது!

நான் எனும் இருப்பு தானாகவே நிகழ்கிறது, தற்போது!

உன் இருப்பில் அனைத்து தோற்றங்களும் நிகழ்கிறது தற்போது!

உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவது  இல்லை.

தற்செயலாக, நான் எனும் இருப்பு விழிப்பில் அறியப்படுகிறது.

உறக்கத்தில் கனவு தானாக நிகழ்கிறது.

நீ பார்க்க மட்டுமே செய்கிறாய்!

என் கேள்வி: கனவு காணும் போது நீ கனவின் உள்ளே தோற்றமாகவே நிஜம் என கொள்கிறாய்!

ஏன்?

நீ விழிக்காததால் கனவின் உள்ளே இருப்பதாக கொள்கிறாய்!

உள்ளே அனைத்தும் தானாகவே நிகழ்கிறது.

விழிப்பு தானாகவே நிகழ்கிறது.

விழிப்பில், கனவு அறியப்படுகிறது.

கனவை பார்க்கும் நீ அமைதியாக பார்க்கிறாய்!

ஏனெனில், பார்ப்பவர் கனவிற்கு அப்பால்….

தோற்றத்திற்கு அப்பால்!

பார்ப்பவர்க்கு பாதிப்பு இல்லை!

தற்போதும்,

நீ பார்ப்பவர்தான்!

வடிவத்திற்கு அப்பாற்பட்ட நீ,

உன்னை, ஒரு வடிவமாகக் கொள்வதால், நிகழ்வுகள் தானாகவே நிகழ்கிறது என அறியாய்!

அனைத்தும் எங்கு நிகழ்கிறது?

பரவெளியில் தானே?

பரம் எங்கு உளது?

உன் சுய அறிவில் தானே?

நான் எனும் சுய அறிவில் தான் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது,

சுய அறிவில்…சுய அறிவால் எனில்

இங்கு தனித்த அடையாளம் இல்லை எனில், வடிவத்திற்கு அப்பாற்பட்ட உன்னால் அமைதியாக நிகழ்வுகளை, கவனிக்க இயலும்!

கே: என்னால் சும்மா இருக்க இயலவில்லையே, சதா நிகழ்வை மற்ற முயற்சித்து துன்புறுகிறேனே, ஏன்?

இங்கு நான் என்பது எது?

நீ வடிவமா?

வடிவம் எனில், வடிவம் எவ்வாறு இயங்குகிறது?

வடிவம் எதனால் அறியப்படுகிறது?

உன் சுய அறிவு இன்றி, வடிவம் அறியப்படுமா?

உன் சுய அறிவில் தான் அனைத்தும் நிகழ்கிறது எனில், உனக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?

நீ உன்னை வடிவமாகவே ஒப்புக்கொள்வதால், உன் சுய அறிவு அறியப்படுவதே இல்லை!

உனக்கு காணும் அனைத்தும் வடிவ அளவில் நிஜமாகவே தோன்றும்.

எனவே, நீ நிகழ்வுகளை மாற்றி அமைக்க முயற்சிக்கிறாய்!

காணும் அனைத்திற்கும் நிஜத்தன்மை கொடுக்கிறாய்!

அதனால், மாற்றம் கொண்டு வர முயலுகிறாய்!

கண்களை மூடி அமைதியில் நிலைத்தால், அறிவாய், இங்கு யாது உளதென!

சூரியனில் இருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் போல, உன் சுய அறிவில் பிரபஞ்சம், அகிலம், அனைத்து உயிரினங்களும் தானாகவே நிகழ்கிறது.

காணும் அனைத்தும் ஒளியின் பிம்பமே, நிஜம் அல்ல, திரையில் காணும் காட்சிகள் போல என அறிந்தால், உன் சுய அறிவு, விழிப்பாக கவனித்து காட்சிகளில் இருந்து விடுபட்டு தன் முழுமையை அறிய ஆரம்பிக்கும்!

அதுவரை, வடிவ அளவில் இந்த விளையாட்டு நிகழ்வுகள் நிஜம் என கொள்ளப்பட்டு, மாற்றம் கொண்டு வர முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

எனது கேள்வி:

கனவுக்குள் எந்த மாற்றம் கொண்டு வந்தாலும் அதுவும் கனவுதானே!

கனவு நிஜமாகுமா?

மாற்றங்கள் நிஜமாகுமா?

கனவை நிஜம் எனகொள்ளும் வரை, அனைத்தும் தானாகவே என் சுய அறிவில் நிகழ்கிறது….

தனித்த அடையாளம் இங்கு ஏதும் இல்லை அனைத்து வடிவங்களும் சுய அறிவில், தானாகவே நிகழ்கிறது என அறியும் வரை… இந்த வடிவ அடையாள விளையாட்டு நிஜமாக கொள்ளப்படும்.

அனைத்தையும் , அமைதியாக கவனித்தால், தற்போதே, இந்த கனவில் இருந்து விடுபடலாம் மிகவும் எளிதாக!

முயற்சி அற்ற நிலையில்!

முயற்சி தடையாக உள்ளது தன்னை, தன் முழுமையை அறிய!

முயற்சி அற்ற நிலையில் நீ முழுமையாக இருக்கிறாய்!

முயற்சிக்கும் போது, கனவை உறுதிப்படுத்துகிறாய்!

முயற்சி அற்ற நிலையில் கனவிற்கு அப்பால், 

பரி பூரணத்தில், முழுமை நீயே!