ஜியெம்:
இக்கேள்வி எந்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது?
உன் இருப்பு எவ்வாறு அறியப்படுகிறது?
நான் என்பதை எதுவாக நீ தற்போது ஒப்புக் கொள்கிறாய்?
நான் என்பது வடிவம் அல்ல!
சுயமாக தோன்றிய அறிவே !
சுய அறிவே!என அறிவாயா?
உன் சுய அறிவு அன்றி, இங்கு யாதும் இல்லை என அறிவாயா?
கே: உண்மையில் நான் யார்?
நான் என்பது: விளக்க முடியா அற்புதம்!
பிறப்பற்ற நித்தியம்!
பிறவா உன்னதம்!
பரிபூரணம்!
முழுமை!
இதை நீ அறிவதே இல்லை!
இதை அறிய முதலில் நீ வடிவ அடையாளத்தில் இருந்து விடுபட வேண்டும்!
கண்களை மூடி தன் இருப்பை அமைதியில் அறிந்து தற்போது தான் சுய அறிவே என அறிவதே அவசியமாகிறது!
கண்களை மூடி வடிவங்களுக்கு அப்பாற்பட்ட தன் எல்லை அற்ற இருப்பை அறிய வேண்டும்!
உன் சுய அறிவு வடிவம் வழியே….தன் இருப்பை அறிவதால், தன்னை ஒரு வடிவமாக ஒப்புக் கொள்கிறது!
வடிவமாக ஒப்புக் கொள்வதால் வடிவத்தின் மேல் திணிக்கப்படும் பல்வேறு அடையாளங்களையும், தனதாகவே ஒப்புக் கொள்கிறது.
தான் சுய அறிவே என அறிவதே முதற்படி!
இது ஆரம்பமே தவிர முடிவில்லை!
சுய அறிவு தான்…
இந்த தோன்றி மறையும் வடிவம் அல்ல!
வடிவம் தான் இல்லையெனில் வடிவத்தின் அடையாளங்கள் மட்டும் எப்படி நிஜமாக இருக்க முடியும்? என அறிந்து…
இந்த வடிவம் மற்றும் அதை சார்ந்த அடையாளங்கள் எதுவும் தான் அல்ல என அவற்றில் இருந்து விடுபட வேண்டும்.
இதுவே அடுத்த படி!
சுய அறிவில் தொடர்ந்து அமைதி நிலையில் நிலைக்கும் போது உன் சுய அறிவானது தன் ஆதாரத்தில் நிலை கொள்கிறது!
தொடர் நிலைத்தலில் தன்னை கடந்து தன் ஆதாரத்தில் தன் பிறவா அற்புதத்தை அறிகிறது!
தான் பிறக்கவுமில்லை! இறக்கவுமில்லை!
இங்கே சுய அறிவில், பரவெளியில் நிகழும் அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே! நிஜம் அல்ல!
காணும் வடிவங்கள், தோற்றங்கள், அனைத்து நிகழ்வுகளும் முற்றிலும் கனவே!
சிறிதும் நிஜம் அல்ல!
என அறிகிறது!
சுய அறிவு தன் ஆதாரத்தை அறிந்தவுடன் விழிக்கிறது!
அறியும் வரை காணும் கனவை நிஜம் என ஒப்புக் கொள்கிறது!
தானாக தோன்றிய சுய அறிவு முதலில் வடிவ அடையாளத்தில்…பிறப்பு இறப்பு எனும் இருமையில் தடுமாறுகிறது!
பின்னர் தன் முழுமையை முற்றிலும் அறிந்த குருவை கண்ட பின்னர், தான் சுய அறிவே!
வடிவத்திற்கும் அப்பாற்பட்ட இருப்பே என அறிகிறது!
பின்னர் சுய அறிவில் தொடர்ந்து நிலைத்து ஒளிக்கும் அப்பாற்பட்ட தன் உன்னதத்தை அறிகிறது!
இங்கு காணும் அனைத்தும் ஒளியின் நிகழ்வே!
தனித்து ஏதும் இல்லை!
முற்றிலும் கனவே!
சிறிதும் நிஜம் இல்லை என அறிகிறது!
உன் சுய அறிவே வடிவ அளவில் காணும் கனவை நிஜம் என ஒப்புக் கொள்கிறது!
தான் சுய அறிவே என அமைதியில் அறிந்தவுடன் விழிக்க தொடங்குகிறது!
தன் இறப்பு அற்ற நிலையை அறியும் போது தன் ஆதாரத்தை அறிகிறது!
ஆதாரத்தில் கனவு இல்லை!
ஆதாரத்தில் இருமை இல்லை!
இருமை அற்ற நிலை…
இதுவே நித்திய நிலை…
இப்போது நான் என்பது நித்தியம்!
உன் நான் என்பது பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை!
இருந்து கொண்டு இருக்கும் நித்தியம்!
இப்போது அறியவும் நான் என்பது எதுவென!