" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், புறத்தளவில், நடைமுறை வாழ்க்கைக்கு ஏதாவது வழிகாட்டுதல் உண்டா அல்லது தேவையில்லையா என்பதை விளக்க வேண்டுகிறேன்.

July 22, 2023 | 86 views

ஜியெம்:

புறம் என்பது என்ன?

தற்போது கண்களை திறந்து இங்கே பரவெளியில் (space) காண்பதே!

புறம் என்று ஒன்று தனித்து இல்லை!

அகமே புறமாக பிரதிபலிக்கிறது இங்கே!

புறத்தில் காணும் காட்சிகள் அனைத்தும் எங்கிருந்து தோன்றுகிறது?

உள்ளிருக்கும் அகத்தின் வழியாக!

கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நான் எனும் இருப்பு அறியப்படுகிறது அல்லவா தற்போது?

இந்த உள் அமைதியே ‘அகம்’ என்பது.

நான் எனும் உள் அமைதியில் இருந்தே பிரபஞ்சம் தற்போது இங்கே புறத்தில் காட்சி அளிக்கிறது!

நான் எனும் சுய அறிவில் தற்போது இங்கே காணும் காட்சிகள்…. பிரபஞ்சம், கோள்கள், அகிலம் மற்றும் உயிரினங்களும் காட்சியளிக்கின்றன!

உன் சுய அறிவே இங்கு காணும் அனைத்திற்கும் ஆரம்பம்!

உன் சுய அறிவின்றி…. இங்கு யாதுமில்லை..!

கே: புறத்தளவில், நடை முறை வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா?

இங்கே என்ன நடக்கிறது?

அனைத்தும் எங்கே நடக்கிறது தற்போது?

முதலில் அறியவும்!
இங்கு காணும் அனைத்தும் தற்போது உன் சுய அறிவில் (Consciousness) தானாகவே நிகழ்கிறது!

உன் சுய அறிவின்றி, இங்கு எது உளது?

நீ காணும் அகிலமும்… தற்போது உன் சுய அறிவில் (I am ness’ Consciousness) நிகழ்கிறது.

நான் எனும் சுய அறிவும் , அகிலமும் தனித்து இல்லை.!

உன் சுய அறிவில் தற்போது அகிலமும் மற்றும் அனைத்து வடிவங்களும், உனது வடிவம் உட்பட நிகழ்கிறது!

இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது!ம

தான் வேறு, அகிலம் வேறு….காணும் அனைத்தும் தன்னில் இருந்து பிரிந்து இருப்பதாக ஒப்புக் கொள்வதால் இக்கேள்வி!

என் கேள்வி:
இங்கே உன்னில் இருந்து எது தனித்து உளது?
சுய அறிவின்றி, இக்கேள்வி கேட்கப்படுமா?

இங்கு அனைத்தும் உன் சுய அறிவில், சுய அறிவால் தற்போது தானாகவே நிகழ்கிறது எனில் ,

உனக்கு இங்கே என்ன வேலை?

இங்கு உன்னில் இருந்து தனித்து எதுவுமில்லை….அனைத்தும் உன் சுய அறிவால் .. (Consciousness) …. தற்போது  தானாகவே நிகழ்கிறது எனில் ..

உனக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது?

உனது வேலை அனைத்து நிகழ்வுகளையும் அமைதியாக கவனித்தலே!

இங்கே உனது வேலை :
முதலில் கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியை அறிதல்!

அமைதியில் உன் நான் எனும் இருப்பை வார்த்தைகள் அற்ற நிலையில் நேரடியாக அறிதல்!

இந்த அமைதியில் நிலைத்து இங்கு நிகழும் அனைத்தையும் அமைதியாக ஒரு படம் போல கவனித்தல்!

அமைதியில் … அடையாளங்கள் நான் அல்ல என அறியப்படும்!

அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட அமைதியில்…. அனைத்து நிகழ்வுகளையும் கவனித்தல்!

விழிப்பு நிலை (waking state) முழுவதும் அமைதியாக கவனித்து…

தேவைப்படும் போது மட்டும் பதில் அளித்து …,

தொடர் அமைதியில் நிலைத்து இருத்தல் …!

தொடர் அமைதியில் ஆனந்தம் அறியப்படும்!

உன் உள் நிலை எல்லையற்ற அமைதியும்..!அளவில்லா ஆனந்தமும்…!

இதை அறிவதே உனது தற்போதைய வேலை!

புறம்….
முழுவதும் வேடிக்கைக் காட்சிகளே!

அகம் முழுவதும்… அமைதி நிலையே!

அகம் வழியே அமைதியாக கவனித்தால்….
புறத்தில் பாதிப்பில்லை…!
காணும் வேடிக்கைக் காட்சிகளில்..!

அமைதியில் நிலைக்கவும்…!

அறியவும் இங்கு காண்பது எதுவும் நிஜம் இல்லை என!

மாறிக்கொண்டே இருப்பது எப்படி நிஜம் ஆகும்?

இங்கு காண்பது அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது எனில்…
எதிலும் நிஜம் இல்லை எனில்
உனது வேலை என்ன இங்கே?

எனது கேள்வி:
பார்ப்பவர் யார்?

பார்ப்பவர் யார் என அறிந்தால் பார்க்கும் எதுவும் நிஜம் இல்லை என அறியப்படும்!
பார்ப்பவரை அறிய கண்களை மூடி அமைதியில் நிலைக்கவும்!

பார்ப்பவர் பார்ப்பதற்கும் அப்பால் எனில்…
பார்ப்பது அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது எனில்…

உனக்கு இங்கே எந்த வேலையும் இல்லை எனில் ….

காண்பது அனைத்தும் கனவே எனில் …

உனக்கு தேவை விழிப்பு தானே?

இங்கு அமைதியே விழிப்பின் ஆரம்பம்!

முற்றிலுமாக விழிக்க…
அமைதியில் நிலைக்கவும்….

விழித்து அறியவும்…

பிறப்பற்ற உன் உன்னதத்தை!

பிறவா அற்புதத்தை..!

அறிந்தால்….

பரிபூரண ஆனந்தமே!

🌿🌹🌿