" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், நிழல், நிஜம் புரிகிறது. நிழல் வாழ்வில் விவகாரம் செய்ய வேண்டி யுள்ளது. நான் ‘இருப்பாக,’ ‘உணர்வாக’ அனைத்தையும் வேடிக்கை பார்த்தாலும், அதன் , அதன் இயல்பாக செயல்படட்டும் என்று நினைத்தாலும், தலையிட்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கவேண்டிய சூழ்நிலை வந்தாலும், நான் ஆகிய இந்த பொய்உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியது உள்ளது. செயலற்று இருக்க சூழ்நிலை இடம் தர வில்லை. இந்நிலையில் (நான்) எப்படி செயல்படுவது? (எனது அறிவும் செயலும் முரண்படுகிறது) விளக்க வேண்டுகிறேன்.

September 14, 2023 | 98 views

ஜியெம்: இக்கேள்வி முற்றிலும் தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது.

‘நான் ஆகிய இந்த பொய் உடல், மனம் பொய்யான கர்மத்தை செய்ய வேண்டியுள்ளது’…… என்று சொல்லப்படுகிறது….

இங்கு நான் என்பதே சுய அறிவு தான்!

சுயமாகவே உன் இருப்பு அறியப்படுகிறது..

உன் இருப்பை நீ அறிய எதையும் சார்ந்திருக்க வில்லை!

கண்களை மூடி அமைதியில் அறியும் உன் இருப்பே ‘ நான் எனும் சுய அறிவு! ‘

இங்கே உடல் , மனம் அனைத்தும் எங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் தானே?

சுய அறிவு இன்றி, உடல், மனம் இருக்குமா?

இங்கு அனைத்து நிகழ்வுகளும் , சுய அறிவால் தானாகவே நிகழ்கிறது!

நான் எனும் சுய அறிவே, தன்னை தனித்த அடையாளமாகவும், தன்னில் இருந்து அனைத்தும் தனித்து உள்ளதாகவும் ஒப்புக் கொள்கிறது.

தான் சுய அறிவே தற்போது என அமைதியில் அறியும் வரை!

தன்னை தனித்த அடையாளமாக கொள்வதால், தான் தனித்து செயல் படுவதாகவும், தான் அல்லல் படுவதாகவும் ஒப்புக் கொள்கிறது..

என் போதனையே!

இங்கு தனித்து எதுவும் இல்லை! அனைத்தும் சுய அறிவில்! சுயஅறிவால் இயக்கப்படுகிறது தற்போது! என்பதே!

எனது கேள்வி:
நீ உன்னை , உன் உன்னத உண்மை நிலையை அறிய விரும்புகிறாயா?

அல்லது தனித்த அடையாளத்தில், கனவில் தடுமாறி கொண்டே இருக்க விரும்புகிறாயா?

உன்னத உண்மையை எளிதில் அறியலாம்.

அதற்கு எவ்வித முயற்சியும் தேவை இல்லை!

முதலில் அறிய வேண்டியது:

நான் என்பது சுய அறிவே!(Consciousness)

சுய அறிவில் அனைத்தும் தானாகவே தோன்றுகிறது, நிகழ்கிறது, மறைகிறது.

சுய அறிவு இன்றி இங்கு எதுவும் இல்லை!

இங்கு பரவெளியில், அனைத்தும் ஒன்றே! தனித்து எதுவும் இல்லை!

என் சுய அறிவில் அனைத்தும் தானாகவே நிகழ்கிறது எனில்,என் வேலை அமைதியாக கவனிப்பதே ….

என அறிதல் அவசியமாகிறது!

இல்லையெனில், தனித்த அடையாளத்தில், கனவை மேலும் மேலும் உறுதி படுத்தி கொண்டு …. தடுமாற வேண்டி வரும்.

கேள்வி; எனது அறிவும், செயலும் முரண்படுகிறது!

அறிவு என எதை குறிப்பிடுகிறாய்?

உன் சுய அறிவு தானே இங்கு செயல்படுகிறது!

சுய அறிவு ( Consciousness) இன்றி ஏதாவது இயங்குமா இங்கே?

சுய அறிவு வேறு, இயக்கம் வேறா?

சுய அறிவில் நிலைத்தால்…. செயலை பற்றி கவலை கொள்ள அவசியமில்லை! ஏனெனில், சுய அறிவே இங்கு செயல்படுகிறது!

சுய அறிவு இல்லாமல், இதை படிக்க முடியுமா?

நடக்க முடியுமா?

எழ முடியுமா?

உண்ண முடியுமா?

கேட்க முடியுமா?

அனைத்திற்கும் நான் எனும் சுய அறிவே மையம்!

இதை அறிந்தால் அறிவு வேறு, செயல் வேறு அல்ல என அறிவாய்!

நீ இங்கு அறிவு என்பதை தவறாக கொள்கிறாய்!

சுய அறிவு என்பது இயல்பாகவே உன் இருப்பை அறிந்து அமைதியில் கவனிப்பது.

சுய அறிவில் நிலைத்தால், காணும் கனவில் விழிக்க வாய்ப்பு உள்ளது.

நான் போதிப்பது சுயமாகவே உன் இருப்பை நான் இருக்கிறேன் என சுயமாக அறிதல்! 

ஏனைய அறிவு அனைத்தும் பொருள் சார்ந்தது.

பொருள் சார்ந்த அறிவை பற்றி நான் போதிப்பதில்லை!

பொருள் சார்ந்த அறிவு உபயோகத்திற்கு மட்டுமே!

அவை நீ அல்ல!

சுய அறிவே நான் என்பது தற்போது!

சுய அறிவும், அதன் செயல்களும் தானாகவே நிகழ்கிறது எனில்…உனக்கு என்ன தடுமாற்றம் இங்கே!

நான் வேறு… என் செயல்கள் வேறு… என்கிற தனித்த அடையாளத்தில்… தடுமாறாமல்… இங்கே என் சுய அறிவே அனைத்திற்கும் மையம் என்று அமைதியில் நிலைத்து, அமைதியாக அனைத்தையும் கவனித்தால் செயல்களும் தானாகவே நிகழ்கிறது என அறியப்படும்!

கனவில் இருந்து கொண்டு கனவை வலுப்படுத்த விரும்புகிறாயா?

அல்லது

கனவில் இருந்து விழிக்க விரும்புகிறாயா?

உன் சுய அறிவே தனித்த அடையாளத்தில் கனவை மேலும் வலுப்படுத்துகிறது!

சுய அறிவே… தான் சுய அறிவே என அமைதியில் அறியும் போது காணும் கனவில் இருந்து விழிக்க ஆரம்பிக்கிறது!

🌹🌹🌹