" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், நான் ஏன் விழிக்க வேண்டும்?விழிப்பின் அவசியம் என்ன?எதற்காக விழிக்க வேண்டும்?

August 7, 2023 | 82 views

ஜியெம்: இக்கேள்வி தனித்த அடையாளத்தில் கேட்கப்படுகிறது.

இங்கு நான் என்பது எது?
தனித்த வடிவமா?
வடிவம்தான் நீ எனில்,
இவ்வடிவத்தை எவ்வாறு அறிகிறாய்?

உன் சுய அறிவில்தான் (Consciousness) தற்போது இந்த வடிவம் தோன்றுகிறது…

உன் சுய அறிவின்றி, வடிவம் காணப்படுமா தற்போது?

உன் சுய அறிவில் உனது வடிவம் மட்டுமின்றி..
அனைத்து வடிவங்களும் தற்போது தானாகவே நிகழ்கிறது…!

இதை நீ சற்றும் அறியாய்.!

உனது வடிவம் மட்டுமின்றி காணும் அனைத்தும் தற்போது தானாகவே நிகழ்கிறது..!

பிரபஞ்சம், அகிலம் அனைத்து உயிரினங்களும் தற்போது தானாகவே நிகழ்கிறது ….!

எங்கே.?

நான் எனும் சுய அறிவில்
(I am ness’ Consciousness).!

உனது  நான் எனும் இருப்பு, அகிலம்  மற்றும் அனைத்து வடிவங்களும் தானாகவே விழிப்பு நிலையில் (waking state) தோன்றி… அனைத்து நிகழ்வுகளும் தானாகவே நிகழ்கிறது…தற்போது.!

உறக்க நிலையில் உன் இருப்பு அறியப்படுவதில்லை.!
எனவே அங்கு அகிலமும் மற்ற வடிவங்களும் இல்லை!

இங்கு நான் என்பது எது?

தோன்றி மறையும் வடிவமா?

வடிவம் தான் நீ என ஒப்புக் கொள்வதால்…
பிறப்பு இறப்பு எனும் இருமை நிலையில் தடுமாறுகிறாய் தற்போது!

வடிவமே.. உன் சுய அறிவில் தான் தற்போது தானாகவே நிகழ்கிறது என நீ அறிய வாய்ப்பில்லை..!

விழிப்பில் அறியப்படும் நான் எனும் சுய அறிவு , உறக்கத்தில் அறியப் படுவதில்லை எனில்….

தோன்றி மறையும் சுய அறிவில் தோன்றி மறையும் வடிவங்களும், நிகழ்வுகளும்..
எவ்வாறு நிஜமாகும்?

எனில் ….
வடிவத்தை சார்ந்த பிறப்பு இறப்பு எனும் நிகழ்வுகளும் எவ்வாறு நிஜமாகும்?

கே: நான் ஏன் விழிக்க வேண்டும்?

விழிப்பின் அவசியம் என்ன?
எதற்காக விழிக்க வேண்டும்?

தனித்த அடையாளத்தில் ( வடிவ அடையாளத்தில் /personality)
பிறப்பு இறப்பு எனும் கனவு தொடர்கிறது…

நிஜத்தில் நீ நித்தியம்!

உனக்கு ஒன்றுமே நிகழவில்லை!

நீ பிறக்கவுமில்லை!இறப்பதுமில்லை.!

இந்த பேருண்மையை நீ அறிவதே இல்லை தனித்த அடையாளத்தில்….!

கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியில் நிலைக்கும் போது
அறிவாய்…!

நான் என்பது எல்லை அற்ற உன் இருப்பே என்பதை.!

எல்லை அற்ற உனக்கு ஏது பிறப்பு?

பிறவா உனக்கு ஏது இறப்பு?

எனில்….
பிறந்தது எதுவென அறிய வேண்டியது அவசியமாகிறது … தற்போது.!

கண்களை திறந்து வடிவ அடையாளத்தில் அனைத்தையும் காணும் வரை…
விழிக்க இயலாது….!

கண்களை மூடி அமைதியில் நிலைத்து உள் இருக்கும் எல்லை அற்ற அமைதியை அறிய ஆரம்பிக்கும் போதே உன் சுய அறிவு ( Consciousness) விழிக்கத் தொடங்குகிறது!

தொடர் அமைதியில்…. முற்றிலுமாக விழித்து… தன் பிறவா நிலையை… வடிவத்திற்கு அப்பாற்பட்ட உன்னதத்தை அறியும் போது காணும் பிறப்பு இறப்பு எனும் கனவில் இருந்து விடுபட்டு … தன் அளவில்லாத ஆனந்தத்தை… எல்லை இல்லாத அமைதியை அறிவதே… விழிப்பு என்பது… !

விழிப்பு என்பது …
வடிவ அடையாளத்தில் காணும் கனவில் இருந்து முற்றிலுமாக விழித்து தன் பிறவா நித்தியத்தை அறிதல்!

கனவில் அனைத்தும் நிஜமே…
பிறப்பு… இறப்பு… உட்பட..!

விழிப்பில்… தன் நித்தியம் அறியப்படும்!
பிறவா அற்புதம் , உன்னதம் அறியப்படும்!

கனவில்……
இறப்பு நிஜமாகவே இருக்கும்.

விழிப்பில்…… தான் மட்டுமே…. அற்புத அமிர்த நிலையில்…!

கனவில் அனைத்து காட்சிகளும்
நிஜமாகவே இருக்கும்…!

விழிப்பில் …. காட்சிகள் நிஜம் இல்லை என அறியப்படும்.!

கனவில் …
தொடர் தடுமாற்றங்களே!

விழிப்பில்…. பரிபூரண அமைதியே!

கனவில்… தெளிவின்மை!
விழிப்பில்… தெளிவின் உச்சம்!

கனவில்….அச்சமே!

விழிப்பில்…. அச்சமில்லை!

கனவு நிஜம் அற்றது!
விழிப்பு நிஜத்தின் உச்சம்.!

கனவில் மரண பயம்.!
விழிப்பில் … இறப்பு என்று ஏதுமில்லை.!

கனவில் …பிறப்பு இறப்பு நிஜம்!
விழிப்பில்…
பிறப்பு இறப்பு ஏதுமில்லை!

கனவின் தடுமாற்றங்கள் முக்கியமா?
கனவில் இருந்து முற்றிலுமாக விழித்து_
தனக்கு ஒன்றுமே நிகழவில்லை!
காணும் அனைத்தும் கனவே என அறியும் விழிப்பு முக்கியமா?

சுய அறிவில் , அமைதியில் நிலைத்து அறியவும் எது முக்கியம் என!

🌻🌹🌻