" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! “இருமையற்றது” (Non dual) குறித்து விளக்குவீர்களா?

March 30, 2022 | 132 views

ஜியெம்:

நீ இருமை அற்ற நித்தியம்!

ஆயினும் இதை நீ அறிவதே இல்லை!

பார்க்கும் நீ இருமை அற்ற…… பரவெளிக்கு அப்பால்..! (Prior to space)

பார்க்கும் காட்சிகள் பரவெளியில்! (Space)

இங்கு பார்க்கும் உன்னைத் தவிர எதுவும் இல்லை !

பார்க்கும் நீ இருமை நிலைக்கு அப்பால்!

இருமை நிலை (Duality) எங்கே நிகழ்கிறது?

நான் எனும் சுய அறிவில் (‘I am ness’ Consciousness)!

இங்கு இருமை நிலையில்… உன் சுய அறிவில் ….தன்னில் தோன்றிய அனைத்து தோற்றங்களையும்…தன்னில் இருந்து பிரிந்து இருப்பதாக ஒப்புக் கொள்கிறது!

அனைத்தும் தன் இருப்பில் இருந்து மட்டுமே தானாகவே தற்போது நிகழ்கிறது என அறிவதே இல்லை!

சுய இருப்பில் இருந்தே பிரபஞ்சம், கோள்கள், விண்மீன்கள் , அகிலம், அனைத்து உயிரினங்களும் தானாகவே நிகழ்கிறது என அறியாமல் தன்னில் இருந்து அனைத்தும் மாறுபட்டதாக ஒப்புக் கொள்கிறது!

எனவே நான் எனும் சுய அறிவில் இருமை நிலையில் அனைத்தும் தோன்றி மறைவதாக ஏற்றுக்கொள்கிறது.

இருமை நிலையில் அனைத்தும் நிஜம் எனவும் ஒப்புக் கொள்கிறது!

தன்னில் (‘I am ness’) இருந்து தோன்றிய வடிவத்தை தனதாகவும், காணும் அனைத்து வடிவங்களும் மாறுபட்டதாகவும் ஒப்புக் கொள்கிறது.

அனைத்து வடிவங்களும் தன்னில் தற்போது நிகழ்கிறது என அறியாமல் அனைத்தும் ஏற்கனவே தோன்றியதாகவும்…தான் பிறந்ததாகவும்…தனக்கு இறப்பு உண்டு என்றும் …இங்கு நிகழும் அனைத்து நிகழ்வுகளும் நிஜம்… எனவும் ஒப்புக் கொள்கிறது தன்னை அறியாமலேயே தற்போது!

பிறப்பு , இறப்பு எனும் நிஜம் அற்ற இருமை நிலையை நிஜம் என ஒப்புக் கொள்கிறது தற்போது தன்னை, தன் பிறவா உன்னதத்தை அறியாததால்….!

கே: இருமை அற்றது குறித்து விளக்குவீர்களா?

இருமை அற்ற உன் அற்புதத்தை விளக்க இயலாது! காட்சிக்கு அப்பாற்பட்ட …எல்லையற்ற… இருந்து கொண்டே இருக்கிற மாபெரும் உன்னதத்தை விளக்க முடியாது! 

காட்சிகளைத் தான் விவரிக்க முடியும்!

காட்சிகள் இருமை நிலையில்!

ஆரம்பமும்….

முடிவும் இல்லா….

பார்ப்பவரை விளக்க முடியாது!

இருமை நிலை என்பது – தோற்றமும் மறைவும்!

இருமை அற்ற நிலை – தோன்றாதது…

தோன்றாத ஒன்று எப்படி மறையும்?

இருந்துக் கொண்டே இருக்கும் அற்புதம்…!

காட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஆரம்பமும், முடிவும் இல்லாத பார்ப்பவரை விளக்க முடியாது…!

அறிய வேண்டியது:
பார்க்கும் நீ பிறப்பு, இறப்பு எனும் இருமை நிலைக்கு அப்பால் தற்போது!

இதை அறிவதே இல்லை!

இதை அறிய முதலில் உன் இருப்பில்…சுய அறிவில் (‘I am ness’ Consciousness) நிலைக்க வேண்டும்!

உறக்கத்தில் உன் இருப்பு அறியப்படுவதில்லை!

விழிப்பில்…. தானாகவே ‘நான் இருக்கிறேன்’ எனும் உன் இருப்பு அறியப்படுகிறது… எவ்வித முயற்சியும் இல்லாமலேயே!

உன் இருப்பு இருமை நிலையில் தான் அறியப்படுகிறது!

உன் இருப்பு இருமை அற்ற நிலையில் அறியப்படுவதில்லை!

இருமை நிலை என்பது எல்லை அற்ற உன் இருப்பு தற்போது ஒரு வடிவம் வழியே தன் இருப்பை ‘ நான் ‘ என அறிகிறது.

இங்கு நான் என்பதே இருமை நிலை தான் வடிவ அளவில்!

இந்த நான் எனும் இருமை நிலையில்… எல்லை அற்ற உன் இருப்பு….தன்னை எல்லைக்குள் சுருக்கிக் கொள்கிறது!

எல்லை அற்றது – இருமை அற்றது!

எல்லை – இருமை நிலை!

பரவெளி எனும் எல்லைக்குள் நிகழும் அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே!

துளியும் நிஜம் இல்லை!

பர வெளியில் அணுக்களின் தொகுப்பில் நிகழும் அனைத்தும் ஒளியின் விளையாட்டே !

சிறிதும் நிஜம் இல்லை!

ஒளியின் விளையாட்டே – இருமை நிலை!

ஒளியின் ஆதாரம் – இருமை அற்ற நிலை!

இங்கு பார்ப்பது அனைத்தும் உள் ஒளியின் விளையாட்டே!

பார்ப்பவர் ஒளிக்கு அப்பால்!

இதை உன் சுய அறிவு தன் ஆதாரத்தில் நிலைக்கும் போது அறியும்.!

தன் முழுமையை, இருமை அற்ற நிலையை அறியும் வரை, தான் காண்பது கனவே!

நிஜம் இல்லை என அறியாது …

கனவின் நிஜம் அற்ற தொகுப்புகளை நிஜம் எனக்கொண்டு தடுமாறும்!

கனவின் தடுமாற்றத்திற்கு முடிவு எது?

கனவில் இருந்து விழிப்பது தானே?

இருமை நிலை எங்கு முடிவுறுகிறது?

இருமை அற்ற நிலையில்…!

இருமை நிலையில் – கனவே!

இருமை அற்ற நிலை – கனவுகள் அற்ற, காட்சிகள் அற்ற, எல்லை அற்ற, மாற்றம் இல்லா அமிர்த நிலை!

இருமை அற்ற நிலையில் பார்க்கும் நீ,

இருமை நிலையில் தானாகவே நிகழும் நிகழ்வுகளை அடையாளம் அற்று ஒரு படம் பார்ப்பது போல அமைதியாக கவனித்தால் தற்போதே கனவில் இருந்து விடுபடலாம்!

அறியலாம்! இருமை அற்ற…(Non dual) பிறப்பும் இறப்புமற்ற… உன் அற்புதத்தை தற்போதே!