" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம், இந்த “நான்” என்ற அறிவு எதனுடனும் சம்பந்தம் வைக்காமல், தன்னில் தானாய் தனித்து இருப்பது எனும் போது, அது எப்படி தோன்றி மறையும் வடிவத்தையும், உணவையும் சார்ந்து இருக்க முடியும்!….? இந்த இடம் என்னை சற்று குழப்புகிறது. தயவுசெய்து, மேலும் என்னை தெளிவுபடுத்த வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

April 19, 2023 | 106 views

ஜியெம்:
சுய அறிவு எல்லையற்றது! வடிவமற்றது. இந்த பரந்த, விரிந்த சுய அறிவு தன் இருப்பை அறிய ஒரு ஊடகம் தேவைப்படுகிறது.

சுய அறிவு வடிவத்தை படைத்து வடிவம் வழியாக ‘ நான் இருக்கிறேன் ‘ என தன் இருப்பை அறிகிறது.

வடிவத்திற்கு முன்பே இருக்கும் சுய அறிவு தன் இருப்பை வடிவம் வழியாகவே அறிகிறது.

தன் இருப்பை அறிய வடிவத்தை சார்ந்துள்ளது!

எல்லையற்ற தன் இருப்பை வடிவம் வழியாக ‘ நான்’ என அறிந்தவுடன், தன்னை ஒரு குறுகிய வடிவமாகவே ஒப்புக்கொள்கிறது.

வடிவத்தின் மேல் திணிக்கப்படும் அடையாளங்களையும் தான் தான் என ஒப்புக்கொள்கிறது.

இப்பொழுது, இந்த வடிவம் வாயிலாக இயங்குகிறது.

வடிவத்திற்கு உணவு குறிப்பிட்ட இடைவெளியில் தேவைப்படுகிறது.

சுய அறிவில் தான் அகிலம் படைக்கப்படுகிறது.

சுய அறிவு தன்னில் அகிலமும், பிரபஞ்சமும், அனைத்து வடிவங்களும் தோன்றுவதை அறியாமல், தன் படைப்பாற்றலை அறியாமல், தன்னை ஒரு சிறு வடிவமாகவே ஒப்புக்கொண்டு, தான் பிறந்ததாகவும், தனக்கு இறப்பு உண்டு என்றும் வடிவ அளவிலேயே வாழ்கிறது.

இங்கு ஒரு பெரிய விளையாட்டே நடைபெறுகிறது….
வடிவ அளவில்!

எல்லை அற்ற அறிவு இப்போது அனைத்து வடிவங்களின் வழியாக இயங்கி, பல் வேறு பரிமாணங்களில் பலவித அடையாளங்களில் செயல் படுகிறது.

தன் எல்லை அற்ற நிலையை அறிவதே இல்லை!

தன் இருப்பை வடிவம் வழியாக அறிவதால், அது வடிவத்தையும், உணவையும் சார்ந்து உள்ளது.

தன்னை அறிந்த குருவை பார்த்த பின்பு,தான் இந்த வடிவத்திற்கு அப்பாற்பட்ட எல்லை அற்ற ஒன்று என கண்மூடி அகத்தின் வழியாக தன்னை அறிகிறது.

சுய அறிவு தன்னை அறிய வடிவம் தேவைப்படுகிறது. எனவே உணவும் தேவைப்படுகிறது.

சுய அறிவு வடிவத்தை உபயோகிக்கிறது!

வடிவம் வாயிலாக தன்னை , தன் பேருண்மையை அறிகிறது.

🌿🌸🌿