" நீயே பரிபூரண நித்தியம் "

அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் இருமை ! அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை கொடுப்பது…. இரண்டற்ற, இருமையற்ற ஒன்றே அதற்கு சரியான வழி என்கிறீர்கள் – ஆனால் நான் காலை கண்ணை திறந்ததிலிருந்து எனக்கு இந்த இருமையே காட்சி அளிக்கிறது… இரவு முடிய…! அப்படி இருக்க நான் எவ்வாறு இருமையை கடப்பேன்?

December 13, 2022 | 84 views

ஜியெம்:

கண் விழிப்பதில் இருந்து உறக்கம் வரை நிகழும் நிகழ்வுகள் எங்கே நிகழ்கிறது?

பர வெளியில் நிகழ்கிறது எனில், பரமெங்கு உள்ளது?

நான் எனும் சுய அறிவில் தானே?

முதலில் நீ அறிய வேண்டியது….

உன் நான் எனும் சுய அறிவே… இங்கு காணும் அனைத்திற்கும் மூலம்…

ஆதாரம்.

சுய அறிவு இன்றி இங்கு காட்சிகள் கிடையாது.

நீ சுய அறிவு என்பதை அறிந்தாயா?

அறிந்தால் எளிமையாக இங்கு நிகழும் நிகழ்வுகள் தானாகவே நிகழ்கிறது…என அறிவாய்.

நீ தனித்த அடையாளத்தை தனதாக ஒப்புக்கொள்ளும் வரை நிகழ்வுகளும் நிஜமாகவே தோன்றும்.

நீ…இருமை அற்ற நித்தியம் தற்போது!

நீ பிறக்கவே இல்லை!

எனில் பிறவாத உனக்கு இறப்பு ஏது?

ஆயினும், நான் எனும் சுய அறிவு வந்தவுடன்…

உன் சுயஅறிவே… தன்னை தனித்த வடிவமாகவும், தான் காண்பது தன்னில் இருந்து வேறுபட்டதாக வும் ஒப்புக் கொள்கிறது.

சுய அறிவில் இருமை ஆரம்பிக்கிறது.!

சுய அறிவு தன் ஆதாரம் ஒளியே என உள் நோக்கி கவனித்து அமைதியில் நிலைத்தால், இங்கு காணும் இருமை நிலையில் நிஜம் இல்லை என அறிந்துவிடும்.

அனைத்தும் ஒளியில் நிகழும் நிகழ்வுகளே!

ஒளியின் பிரதிபலிப்பே இங்கு நிகழும் உலகம் மற்றும் அனைத்து நிகழ்வுகளும் என அறிந்து விடும்.

சுய அறிவு.. தன் ஆதாரத்தை நித்தியத்தை அறிந்தவுடன்… இங்கு காண்பது கனவே…நிஜம் அல்ல!

என அறியும்.

கண்களை விரித்து காணும் காட்சிகள் அனைத்தும் கனவே!

“நிஜம் இல்லை!

இருமை நிலையில் நிஜம் இல்லை என அறிந்தால்…

உன் சுய அறிவு….

மேலும் நேரத்தை வீணாக்காது…

உள் நோக்கி கவனிக்க ஆரம்பிக்கும்….

தன் இருமை அற்ற உன்னதத்தை அறியலாம்.

கண்களை திறந்து பார்த்து காணும் காட்சிகள் நிஜம் என ஒப்புக்கொள்ளும் வரை…

இருமை எனும் கனவே நிஜமாக கொள்ளப்படும்.

இருமையில் இங்கு அனைத்தும் கனவே!

இருமை அற்ற நித்தியத்தில் , கனவுகள் இல்லை.

எல்லை அற்ற…. விளக்க முடியாத ஆனந்தமே!

இருமை எனும் கனவில் இருந்து விழிக்க ஒரே வழி கண்களை மூடி உள் நோக்கி கவனித்து அமைதியில் நிலைத்தலே!

இப்பொழுதாவது, இருமை அற்ற, கனவிற்கு அப்பாற்பட்ட உன்னத நித்தியத்தை அறிய கண்களை மூடவும்.

அமைதியில் நிலைக்கவும்!

கண்களை விரித்து கனவை நிஜம் என கொள்வதில் இருந்து விடுபட, இதுவே சிறந்த வழி!

அறியவும்! தான் இந்த பரத்தில் காண்பது அனைத்தும் கனவே என!

அறிந்த பின் இருமை ஏது?

தடுமாற்றங்கள் ஏது?